உஸ்பெகிஸ்தானில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த மருந்து சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு Doc-1 Max சிரப்பை எடுத்துக் கொண்ட 21 குழந்தைகளில் 18 குழந்தைகள் அதை உட்கொண்ட பிறகு இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனம்

இச்சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கான சிகிச்சையாக குறித்த நிறுவனத்தின் இணையதளத்தில் சிரப் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது உஸ்பெக்கிஸ்தான் தூதரகம் தெரிவித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிரப்பின் ஒரு தொகுதியில் எத்திலீன் கிளைகோல் இருந்ததாகவும் இது ஒரு நச்சுப் பொருள் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குராமாக்ஸ் மெடிக்கல் மூலம் உஸ்பெகிஸ்தானில் சிரப் இறக்குமதி செய்யப்பட்டது என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு

குழந்தைகளின் உயிரிழப்பிற்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து உஸ்பெக்கிஸ்தானுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா “உலகின் மருந்தகம்” என்று அறியப்படுகிறது மற்றும் அதன் மருந்து பொருட்கள் ஏற்றுமதி கடந்த பத்தாண்டுகளில் இருமடங்கு அதிகரித்து கடந்த நிதியாண்டில் 24.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அனைத்து மருந்தகங்களிலிருந்தும் டாக்-1 மேக்ஸ் மாத்திரைகள் மற்றும் சிரப்களை திரும்பப் பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.