ஈரானில் அரச தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தருணத்தில் சைபர் தாக்குதலை அரச எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அதியுயர் தலைவர் அல் கமேனி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது இந்த இணையத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு அந்த செய்தி ஒளிபரப்புக்கு பதிலாக ஈரானின் அதியுயர் தலைவர் அல் கமேனியின் உருவத்தையும், சமீப காலங்களில் அரசின் நடவடிக்கைகளால் இறந்த பெண்களின் படத்தையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காணொளியொன்று ஒளிபரப்பாகியுள்ளது.

ஈரானில் பொலிஸ் காவலில் இருந்த குர்திஷ் சிறுமி உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், இந்த நடவடிக்கையும் போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.