சுவீடன் கடந்த 2024 மார்ச் 7ந் திகதி முதல் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்பினராக இணைந்து கொண்டது.

1812இல் நடைபெற்ற நெப்போலியன் யுத்தத்தில் ரஷியப் பேரரசிடம் பின்லாந்து உட்பட தனது பெரு நிலங்களை இழந்த பின்னர் சுவீடன் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றது. முதலாம் , இரண்டாம் உலக யுத்தங்களின் போதும் இது நடுநிலைமைக் கொள்கையுடனே இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்ய நாடுகளுக்கிடையினான பனிப்போரின் போதும் சுவீடன் நடுநிலைமையை நிலைநிறுத்தியது. 1949 இல் நேட்டோ உருவான போதும் சுவீடன் அதில் ஆர்வம் காட்டவில்லை. 1990 களின் நடுப்பகுதியிலே தான் சுவீடன் , நேட்டோவின் அமைதிக்கான கூட்டாண்மை (PfP) திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றுடன் இணைந்தது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை என்பதன் கீழ் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் பரஸ்பர பாதுகாப்பு விதிகள் ஆகியவை அடங்கும். ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான இந்தப் புதிய பிணைப்புகள் மூலம் சுவீடன் நடைமுறையில் கடைப்பிடித்த அணிசேராமையை முடிவுக்குக் கொண்டுவந்தாலும், நேட்டோவில் சேருவதற்கான அதன் ஆதரவு குறைவாகவே இருந்தது.

2022 உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விவாதத்தில் ஒரு திருப்புமுனையாக மற்றும் நேட்டோ உறுப்பினர்களுக்கு ஆதரவாக சுவீடன் தன் பொதுக் கருத்தை மாற்றியது. அண்டை நாடான பின்லாந்துடன் சேர்ந்து, 18 மே 2022 அன்று நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. இதனடிப்படையில் சுவீடன் 7 மார்ச் 2024 அன்று நேட்டோவில் உறுப்பினரானது.