பிரபல எழுத்தாளர் உமா வரதராஜனின் ‘ ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் ( 12.03.2023 ) கல்முனை மாநகரில் இடம் பெற்றது. கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில், கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த நூலை, கல்முனை வியூகம் கலை இலக்கிய அமைப்பு வெளியிட்டது.

மேனாள் பேராசிரியர் செ.யோகராசா நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் புத்தகத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.

மூத்த ஊடகவியலாளர் க. குணராசா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், டொக்டர் திருமதி புஷ்பலதா லோகநாதன், கவிஞர் சோலைக்கிளி, மன்சூர் ஏ. காதர், சபா சபேசன், வாசுதேவன், சிவ -வரதராஜன், சஞ்சீவி சிவகுமார், பி. சஜிந்ரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வில், கல்முனை உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்கியும் கலந்து சிறப்பித்தார்.