டிலக்‌ஷன் மனோரஜன்

புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஐனவறி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தமிழ் மொழியின் பெருமையயும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா இங்கிலாந்தில் சனிக்கிழமை (28 ஐனவறி 2023) நடைபெற்றது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து கிங்ஸ்டனின் நியூமோல்டனில் உள்ள Jubilee Square எனும் இடத்தில் மேற்படி தமிழ் மரபுத் திங்கள் விழா வெகுசிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.

Royal Borough of Kingston, Newmalden Partnership, Institute of Tamil Culture, மற்றும் சறே தமிழ் பாடசாலை ஆகியவர்களின் இணை அனுசரணையுடன் இந்த விழா சிறப்புற நடைபெற்றது. IBC தமிழ், நமது ஈழநாடு மற்றும் மெய்வெளி ஆகியன ஊடக அனுசரணை வழங்கினர்.

இந்த விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு சேர் எட் டேவி (Rt.Hon.Sir Ed Davey), ரிச்மண்ட் பார்க் மற்றும் நார்த் கிங்ஸ்டன் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சாரா ஓல்னி (Hon. Sarah Olney), கிங்ஸ்டன் நகரபிதா கவுன்சிலர் யோகன் யோகநாதன்- Mayor of Royal Borough of Kingston Upon Themes), அவரின் பாரியாரானமேயரஸ் சரோஜினி யோகநாதன், கிங்ஸ்டன் நகரசபை தலைவர் கவுன்சிலர் அன்றியஸ் கேர்ஸ்ச் (Cllr. Andreas Kirsch), கிங்ஸ்டன் கவுன்சில் நிறைவேற்று பணிப்பாளர் சாரா அயர்லாந்து (Sarah Ireland CEO) ஆகியோர் கலந்து உரையாற்றினர்.

மேலும் முன்னாள் மேயரும் தற்போதய கவுன்சிலருமான தயா தயாளன் மற்றும் பல கவுன்சிலர்கள், தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழரின் வீர இசையான பறை இசை முழங்க, கூடவே நாதஸ்வர-தவில் இசையுடன் புலியாட்டம், காவடி ஆட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் உட்பட்ட மேலும் பல கண்கவர் தமிழர் கலைகள், தமிழர் பாரம்பரிய உடைகள், திருமண பெண் அலங்காரம் மற்றும் பண்டைய இசை வாத்தியங்கள் என்பவற்றை காட்சிப்படுத்தியபடி இலண்டன் நியூமோல்டன் வீதிவழியாக பவனி வந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களும் பெரும் திரளான மக்களும் கடும் குளிரிலும் ஒன்றுகூடியிருந்த திறந்த வெளி அரங்கிற்கு வந்துசேர்ந்தனர்.

மேற்குறித்த திறந்த வெளி அரங்கில் தைப்பொங்கல் காட்சிப்படுத்தல் இடம்பெற்றதுடன், அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இன்னிய வாத்திய கச்சேரி, தமிழ்தாய் வாழ்த்து நடனம், கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், தமிழர் வர்மக்கலை மற்றும் கும்மி நடனம் என தமிழ் திங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டதுடன் ஒன்றுதிரண்டிருந்த பெருந்திரளான மக்களிற்கு பொங்கலும் வழங்கி மகிழப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நியூமோல்டன் மெதடிஸ்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த உள்ளக அரங்கிற்கு கொண்டாட்டம் நகர்ந்ததுடன் அங்கே மேலும் பல தமிழர் பாரம்பரிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

உள்ளக அரங்கில் சிறப்பம்சமாக “இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்” (Tamils of Lanka: A Timeless Heritage) என்ற கண்காட்சி இடம்பெற்றது.

தமிழர் வீரவரலாற்றையும், பண்டைய பாவனைபொருட்கள் மற்றும் இனஅழிப்பையும் காட்சிப்படுத்துவதாக இந்த கண்காட்சி அமைந்தது.

இதேபோல சமையல் கலை நிபுணரான கொளரி ரூபன் அவர்களின் தமிழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியும் இடம்பெற்றது.

அத்துடன், உள்ளக அரங்க நிகழ்வுகளான தவில்- நாதஸ்வர சமா, உடுக்கு இசை, சிறார்களின் நடனங்கள், பொங்கல் பாடல் ஆட்டம், கூத்து, நாடகம் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் அதிவிசேட நிகழ்வாக, பிறேமாலய நாட்டிய சேஸ்திரா கல்லூரியின் ஸ்தாபகரும், யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆசிரியை நாட்டிய கலை மாமணி பிறேமளாதேவி ரவீந்திரன் அவர்கள் பெருமையுடன் வளங்கிய “இன்னியம்” என்ற தமிழர் பாரம்பரிய இசை வாத்தியங்களின் அணிவகுப்பு மற்றும் ஈழ நாட்டியம் (இராவணன் கதை) என்பன இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தன.

ஐக்கிய இராட்சியம் லண்டன் மாநகரில் முதன் முறையாக தமிழர்களின் ஈழத்து பாரம்பரிய நாட்டியமாகிய கூத்தை லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழ் மகாநாட்டில் முதன் முறையாக அரங்கேற்றிய பெருமைக்குரிய கலாநிதி திரு. பாலசுகுமார் அவர்களும் கலைமாமணி திருமதி பிறேமளாதேவி ரவீந்திரன் இருவருக்குமே சேரும்.

அன்று தொடக்கம் இன்றுவரைக்ககும் தமிழர் பாரம்பரிய ஈழ நாட்டியத்தை மிக நேர்தியாக தங்கள் மாணவர்களை பயிற்று பலதடவை அரங்கேற்றி வருகின்றனர்.

உஷா ரகுநாதனின் மாணவர்களின் கிராமிய நடனம், V2 நாட்டிய குழுவின் கும்மியாட்டம், கொவென்றி சித்திர கலைமன்ற மாணவர்களின் முருகன் கொளத்தவம் நாட்டிய நாடகம், சாம் பிரதீபன் மற்றும் றஜித்தா பி்ரதீபன் அவரகளின் மெய்வெளி கலையக மாணவர்களின் மற்றும் தெருக்கூத்து இறுதியாக தமிழ் மற்றும் தமிழர்களின் தற்போதைய நிலைபற்றிய மெய்வெளி நாடக அரங்க கலைஞர்களின் “வீழாத்தாய்” இசை வழி நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

தமிழ் கலாச்சாரம் மற்றும் பரம்பரியம் பற்றிய இரண்டாம் தலைமுறையினரின் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

உலகில் பல இடங்களில் தமிழர் தமிழர் விழாக்கள் இடம்பெற்ற போதும், இந்த விழா மற்றவற்றை விட அதிசிறப்பானதாக இருந்ததாக பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.

குறிப்பாக, வேறு எங்கும் நடைபெறாத இளைஞர்களின் புலியாட்டம் மிகவும் வரவேற்பைப் பெற்று இருந்தது.

கலாநிதி காமராஐர் அவர்களின் வீரக்கலைகள் பாசறையால் வழங்கப்பட்ட கம்பு, சிலம்பு, வாள்வீச்சு மற்றும் வர்மக்கலை காட்சிகள் மிகச்சிறப்பாக இருத்தன.

அதுபோல கலைஞர் சபேஸ் சுகுணசபேசன் தலைமையிலான எட்டு விழிசார் கலைஞர்கள் தமிழ் மரபு சாந்த தமது பிரதிபலிப்புகளை காட்சிப்படுத்தினர்.

இவ்வாறு மேலும் பல அரிய நிகழ்வுகளுடன் இந்த கொண்டாட்டம் வேறு எங்கும் இல்லாதவாறு வெகுசிறப்பாக நிறைவுபெற்றது.

You missed