இலங்கையும் குரங்கு காய்ச்சல் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் நேற்று (23) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இதனை அறிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, உலகில் 75 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெரும்பாலும் பதிவாகிய குரங்கு காய்ச்சல், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பதிவாகியுள்ளன.

இந்த நோயால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இந்தியாவின் டெல்லியில் குரங்கு காய்ச்சல் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட, வெளிநாட்டு பயண வரலாறை கொண்டிராத முதலாவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் இவரென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

31 வயது நபரொருவரிடமே இந்நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட நான்காவது குரங்கு காய்ச்சல் தொற்றாளர் இவராவார்.

முந்தைய மூன்று பேரும் கேரளாவில் அடையாளம் காணப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.