புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று!

கல்முனையில் கலாநிதி செந்தில்நாதன் கருத்து 

( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை கல்வித் துறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று.  உளவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தம் . இதனை நீக்கி  எட்டாம் ஆண்டில் மாற்றுவது பொருத்தமானது.

இவ்வாறு  நியூசிலாந்தில் வாழும்  

பாண்டிருப்பின் முதல்

கலாநிதி சாமித்தம்பி செந்தில்நாதன் தெரிவித்தார் .

கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், 

பாண்டிருப்பின்  முதல் கலாநிதி சாமித்தம்பி செந்தில்நாதன் மற்றும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினரும் கனடாவில் இருந்து பல்வேறு  சமூகப்பணிகளுக்கு உதவும் முக்கியஸ்தருமான  நோ. விஜயரெட்ணம் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வு  கல்முனை நெற் தலைமையகத்தில் தலைவர் புவி.கேதீஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முன்னதாக, இயக்குனர் சபை உறுப்பினர் ஓய்வு நிலை அதிபர் எஸ்.சந்திரலிங்கம் கௌரவிக்கப்படுவோர்   பற்றிய அறிமுக உரையாற்றினார்.

அங்கு கலாநிதி செந்தில்நாதன்  மேலும் பேசுகையில்..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வயதுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத ஒன்று. பெற்றோர் பரீட்சையாகவே அதனை கருத வேண்டி இருக்கிறது .

இது தொடர்பாக விரைவில் இலங்கை அரசாங்கத்திற்கு இது விடயத்தை குறிப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை அனுப்பவிருக்கிறேன்.

 நான் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய காலத்தில் பொருளியல் பாடத்தில்  ஒரு அலகில் ஏற்பட்ட ஐயப்பாட்டை கட்டுரையாக எழுதி இருந்தேன். இங்கு யாருமே அதனை ஏற்றுக்கொள்ளவில்லை .மாறாக கிண்டல் அடித்தார்கள். ஆனால் அதே விடயம் சில வருடங்களில் அவுஸ்திரேலியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று அது பிரபலமாக இருக்கின்றது. எனவே சவால்களை முகங்கொள்ளும் ஆற்றலை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

பிள்ளைகள் கற்பதற்கு உவப்பான சூழல் அவசியம்.அதனை பெற்றோர்கள் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். என்றார்.

கல்முனை நெற் ஊடக ஆலோசகரும் ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளருமான  விரி. சகாதேவராஜா பாராட்டுரையை வழங்கி நன்றி கூறினார்.

இருவருக்கும் கல்முனை நெற் ஊடகக் குழுவினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.