ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதல்முறையாகக்கண்டறியப்பட்ட குரங்கு அம்மை, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடியாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதற்கு முன் இல்லாத அளவு பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. ஆய்வாளர்களின் கருத்துகளின்படி குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்