18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற இடங்களில் இது தொடர்பான கருமபீடங்களை திறக்க ஏற்பாடு செய்யுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.

TIN வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், அரச நிர்வாகம் மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அனைத்து பிரதேச செயலகங்களும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

முன்னர் செய்தது போல், எரிபொருளுக்கான QR குறியீடுகளை வழங்குவதைப் போன்றே, TIN வழங்குவதற்கான திறமையான செயல்முறையை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஒன்லைன் பதிவு விண்ணப்பப் படிவத்தை சுருக்கவும், ஐந்து நாட்களுக்குள் எண்ணை வழங்குவதற்கான நேரத்தை விரைவுபடுத்தவும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.