கிழக்கின் முக்கிய மாநாகரப் பிரதேசமான கல்முனை மாநகரில் மற்றுமொரு தமிழ் – முஸ்லிம் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் கல்முனை மாநகரில் அமைந்துள்ள கல்முனை பொது நூலகத்திற்குப் பெயரிடும் விடயமே தமிழ் – முஸ்லிம் உறவைச் சீர் குலைக்கும் புதிய விடயமாக உருவெடுத்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 59 ஆவது மாதாந்தக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற போது உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான மறைந்த மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கூறினார்.

இதன்போது மாநகர சபையின் சில உறுப்பினர்கள் மர்ஹூம் மன்சூர் கல்முனை தமிழ் மக்களுக்கு பாகுபாடற்ற சேவையாற்றினார் எனினும் தற்போதைய சூழ்நிலையில், இவ்வாறான பெயரிடல் விடயத்தை ஆற அமர பேசி முடிவெடுக்கலாமெனக் கருத்து வெளியிட்டனர்.

உறுப்பினர்களான ஹென்ரி மகேந்திரன், சந்திரசேகரம் ராஜன் சபையில் இன்றுள்ள நிலமைகளை கருத்திற்கொண்டு அது தொடர்பில் எந்த தீர்மானத்திற்கும் இப்போது வரவேண்டாமென வலியுறுத்தியதையடுத்து மாதாந்தக் கூட்டம் நிறைவுறுவதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம். றகீப் அறிவித்து முடிவுறுத்தினார்.

கல்முனை மாநகரசபையின் ஏனைய உறுப்பினர்களும் இதற்கு கடும் எதிப்பை வெளியிட்டு வருகின்றனர்

எனினும் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரான ரஹ்மத் மன்சூரின் தகப்பனான முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரை கல்முனை மாநகர பொது நூலகத்திற்கு சூட்டும் விடயம் விடாக்கண்டன் கொடாக்கட்டன் நிலைக்குத் தற்சமயம் வந்துள்ளதாக அறிய வருகின்றது.

எது எப்படியோ குறித்த பெயரை சூட்டும் தீர்மானத்தை மாநகர சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் சபையில் நிறைவேற்றி விடவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதாகத் தற்பொழுது தெரிய வருகின்றது.

எனவே, முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் ஆசிர்வாதத்துடன் கல்முனை மாநகர சபையின் விசேட கூட்டம் ஒன்ற எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும்,

இக்கூட்டத்தில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மன்சூரின் பெயர் சூட்டும் தீர்மானம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்த விடயம் ஏற்கனவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் தரப்பினரின் முட்டுக்கட்டைகளால் நொந்து போயிருக்கும் கல்முனை வாழ் தமிழ் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

இதனால் தமிழ் – முஸ்லிம் தரப்பினரிடையே கல்முனை மாநகரில் மற்றொரு பூகம்பம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது எழுந்துள்ள தமிழ் – முஸ்லிம் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.

மற்றொரு தமிழ் – முஸ்லிம் இன முறுகலுக்கு கல்முனையில் தூபமிடும் இந்த நடவடிக்கை கைவிடப்பட வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.