பாறுக் ஷிஹான்

கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட முனைவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயரை மாற்றினால் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம், ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

கல்முனையில் நேற்று (17) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

விசேட செய்தியாளர் சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம், ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபை இம்மாத அமர்வில் கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம்.மன்சூரின் பெயரை சூட்டுவதாக மாதாந்த நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் தனி நபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டவை கண்டிக்கத்தக்கது.

கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சராக செயல்பட்ட மன்சூர் இன மத பேதங்களின்றி சிறப்பான சேவைகள் செய்தவர், தமிழ் மக்களுக்கும் பல வழிகளில் உதவியவர், அவர் போன்ற ஒரு முஸ்லிம் தலைவர் இன்றில்லை, அவர் நல்லவர், அதில் இது வேறு கருத்துக்கிடமில்லை.

இருந்தபோதிலும் தற்போது எதிர்வரும் தேர்தலில் குறி வைத்து சிலர் விடயத்தை அரசியல் ஆக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றனர். அதில் வெளிப்பாடு இத் தனிநபர் பிரேரணையாகும்.

கல்முனை பொது நூலகமானது இரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பொதுச்சொத்து. இந்த நூலகத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்படுவதை சிலர் மறைமுகமாக முன்னெடுக்கின்றனர். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.