நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் முயற்சியின் பயனாக பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகன அறிமுக நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல். இந்தியாஸ் தலைமையில் அந்நூர் கலாச்சார மண்டப முன்றலில் இன்று (17) மாலை இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம நிலதாரி ஏ.ஏ. நளீர், சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபை தலைவர் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி), மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ. பௌசர், மாளிகைக்காடு ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் எம்.எம். ஜெமீல், மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்களின் செயலாளர்கள், பிரதேச முக்கிய அமைப்புக்களின் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பொலிஸார், மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாஸா நலன்புரி அமைப்பின் கடந்த கால சேவைகள் நினைவுபடுத்தப்பட்டதுடன், நேரடி அரசியலில் களமிறங்கிய மூன்று உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

கடலரிப்பில் முழுமையாக சேதமாகிய மாளிகைக்காடு ஜனாஸா மையவாடிக்கு புதிய இடமொன்றை வழங்க கோரி பொதுமக்களின் சார்பில் பல்வேறு பொது அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்து வருவதன் தொடர்ச்சியாக ஜனாஸா மையவாடி தொடர்பில் ஜனாஸா நலன்புரி அமைப்பும் மகஜரொன்றை அதிதிகளிடம் இதன்போது கையளித்தனர்.

அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் இந்த ஜனாஸா அமைப்பின் செயற்பாடுகளை இன்னும் இலகுபடுத்தும் விதமாக ஜனாஸா வாகனத்தை வழங்க உதவிய எல்லோருக்கும் நன்றிகளை தெரிவித்த அமைப்பினர் இந்த ஜனாஸா வாகனம் 24 மணிநேர சேவையில் ஈடுபட தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117