சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நடைபெறவுள்ள பேரணியில் மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் என அனைவரும் அலை அலையாக இணைத்து தமிழ் தேசத்தின் நிலைப்பாட்டினை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்துமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து பகிரங்கமாக மாணவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்தனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறீலங்காவின் சுதந்திரதினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வருகிறோம்.

தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையின் இன்றைய பொருளாதாரப் பின்னணியில் எழுந்துள்ள சூழலில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும் கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றைத் திட்டமிட்டு ஊடகத்தினரை கடந்த ஜனவரி 26ஆம் திகதி சந்தித்திருந்தோம்.

பின்னர் எமது கரிநாள் பிரகடனம் மற்றும் பேரணிக்கான நிலைப்பாடுகளை எமது மக்களுடன் கலந்துரையாடும் நோக்குடன் கடந்த ஒரு வார காலமாக வடக்கு-கிழக்கெங்கும் மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் மற்றும் மாணவர்களுடனும் பல சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தோம்.

அனைத்து தரப்பினரும் மாணவர்களாகிய நாம் முன்னெடுத்துள்ள நிலைப்பாடுகளையும், செயல்பாடுகளையும் மிகவும் வரவேற்றதோடு, முழு ஒத்துழைப்பை நல்குவதாகவும் கூறி நின்றனர்.

அத்தோடு பேரணி தமிழர் தேசத்தின் அடிப்படைகளை முன்னிறுத்தி நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நின்றனர். மட்டுமல்லாது, இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் நிலைமைகளில் மாணவர்களே தீர்க்கமாக விடுதலை போராட்டத்தினை கையிலெடுத்து முன்செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

இக்கருத்துக்கள் யாவும் எம்மையும், நாம் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணியையும் வலப்படுத்துவதாகவே நாம் காண்கிறோம்.

அந்த வகையில், தமிழ் மக்கள் மிகப் பேரெழுச்சியுடன் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இப்பேரணியை மேலும் வலுப்படுத்த வடக்கு கிழக்குத் தழுவிய எமது வர்த்தக சமூகத்தினரையும், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற் சங்கங்களையும் பெப்ரவரி 4 கரிநாள் அன்று தொழில் புறக்கணிப்பையும், முழுமையான கடையடைப்பையும் மேற்கொண்டு கர்த்தாலை முழுமையாக அனுஸ்டித்து சிறிலங்காவின் சுதந்நதிர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும் உரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

அத்துடன் இத்தினத்தில் உங்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள், தொழில் இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு காலாகாலமாக நாம் சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர் தேசமாக முன்னெடுக்கும் போராடத்தில் இணைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

அத்துடன், யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறும் பேரணிகளில் மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலை அலையாக இணைத்து தமிழ் தேசத்தின் நிலைப்பாட்டினை முழு உலகத்திற்கும் வெளிப்படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் – என்றுள்ளது.