ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு!

உலக சுகாதார ஸ்தாபன வைத்திய நிபுணர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.

ஒரு நாள் வைத்திய சேவை முறையை ( day care system ) இவ் வைத்தியசாலையில் முன்னெடுப்பதற்கான ஏற்பாட்டு அறிக்கையை தயாரிக்க வைத்திய நிபுணர் குழுவினர் இங்கு விஜயம் செய்திருந்தனர்.

இவ்விஜயத்தில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி அமெரிக்க டுக் பல்கலைக்கழக பேராசிரியர் வைத்திய கலாநிதி சியுங்கிர்ஸ் அஹ்ன் மற்றும் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் களணி பல்கலைக்கழகப் பேராசிரியர் செகான் வில்லியம்ஸ் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

கல்முனை ஆதார வைத்திய சாலையின் வைத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் இவர்களை வரவேற்று உரிய விபரங்களை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
சிறப்பானதும் முன்மாதிரியானதுமான வைத்திய சேவையை வழங்கும் கல்முனை ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் இருந்துஇத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஒரு நோயாளிக்கு மருத்துவமனையில் அதே தினத்தில் அவருக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு குறித்த நாளிலேயே அவர் வீடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது நோக்கமாகும்
இத்திட்டத்தின் மூலம் நோயாளியின் மனநிலை ஆரோக்கியமாக அமைவதுடன் அரசுக்கு ஏற்படும் மேலதிக விரயங்களும் குறைக்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபன வைத்திய நிபுணர் குழுவினர் கருத்துக்களை தெரிவித்தனர்.