உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக பாரிசவாத தினத்தை (ஐப்பசி.29) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் “ பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி ” நேற்று 31.10.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு. ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வானது வைத்தியசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக கல்முனை அரச பேருந்து நிலையத்தை அடைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திலிருந்து இலங்கை வங்கி சந்தி வழியாக மீண்டும் வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவினூடாக வைத்தியசாலையை வந்தடைந்தது.

02 கிலோமீற்றர் தூர வழிப்புணர்வு நடைபவனியை நிறைவு செய்ததை தொடர்ந்து வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், உதவி வைத்திய அத்தியட்சகர்களான ஜெ.மதன் மற்றும் சா.ராஜேந்திரன், பொது வைத்திய நிபுணர் நா.இதயகுமார்,பாரிசவாத சிகிச்சைப்பிரிவு பொறுப்பு வைத்தியர் பா.சுரேஸ் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு. வைத்தியசாலையில் பாரிசவாத சிகிச்சைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் பொது வைத்திய நிபுணர் நா.இதயகுமார் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.