திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

(ஏயெஸ் மெளலானா)

தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 55ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (26) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்திருந்ததுடன் அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர்களான சந்திரசேகரம் இராஜன், எம்.குபேரன் ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர்.

இதன்போது திருகோணமையில் அமைந்துள்ள தமிழர்களின் பாரம்பரிய வணக்கஸ்தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் அதன் புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த ஆலய வளாகத்தை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் பேரின சக்திகளின் பின்புலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

காலத்திற்கு காலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மதஸ்தலங்களும் பூர்வீகக் காணிகளும் குடியிருப்பு நிலங்களும் பல்வேறு வகையிலும் இவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டு வருகின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக சிறுபான்மையினர் ஒன்றிணைந்து குரல் எழுப்பி, முறியடிக்க முன்வர வேண்டும் எனவும் உறுப்பினர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

அதேவேளை, திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக தலையிட்டு, ஆலய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதுடன் அதன் சுதந்திரமான செயற்பாடுகளையும் இருப்பையும் உறுதிப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று கல்முனை மாநகர சபை வலியுறுத்தும் பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்து, எமது ஒற்றுமையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவர்களது உரைகளைத் தொடர்ந்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் இதனை ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அனுப்பி வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.