கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் 175வது ஆண்டுவிழா கடந்த மாதம் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் கல்முனை சேகர முகாமைக்குரு அருட்திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு W.P.E.எபனேசர் யோசப் அவர்களும் சிறப்பு அதிதியாக வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவர் அருட்கலாநிதி M.T.அருள்ராஜா அவர்களுடன் இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருப்பேரவை உப தலைவர் திருமதி ரோஸினி பீரிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

காலையில் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றதுடன் கடந்த காலங்களில் கல்முனை மெதடிஸ்த திருச்சபையில் பணியாற்றிய ஊழியர்களின் விபரங்களைக் கொண்ட விளம்பரப் பலகைத் திறப்பும் இடம்பெற்றது.

மாலை நிகழ்வில் கல்முனையில் பணியாற்றியவர்களின் புகைப்படங்களை திறந்து வைக்கும் நிகழ்வும் ‘கிறிஸ்துவின் பணியில் 175 வருடங்கள்’ என்ற நூல் வெளியீடும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு W.P.E.எபனேசர் யோசப், வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவர் அருட்கலாநிதி M.T.அருள்ராஜா மற்றும் திருப்பேரவை உப தலைவர் திருமதி ரோஸினி பீரிஸ் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மலர் வெளியீட்டு உரையினை முன்னாள் திருப்பேரவை உப தலைவர் திரு வடிவேல் பிரபாகரன் நிகழ்த்தினார்.

இரத்த தான நிகழ்வு175 வது ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக இரத்த தான நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் பல வாலிப யுவதிகளும் பாதுகாப்பு படையினரும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வை கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் ஆண்கள் சங்கம் ஒழுங்கு செய்திருந்ததுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊழியர்கள் சிறப்பான பங்களித்திருந்தனர்.