பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்படாது என பொருளாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான அதன் நிறைவேற்று சபையின் அனுமதிக்கான காலக்கெடுவை குறிப்பிட முடியாது என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடன் வழங்கும் நாடுகளுடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே பெரும்பாலானவை விடயங்கள் தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

எவ்வாறாயினும், ஒரு நாடு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் சரியாக மேற்கொள்ளப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும் இலங்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நாங்கள் செய்ய வேண்டிய விடயங்களை சரியான முறையில் செய்தால் எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

வரவு செலவு திட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும். டொலர் சம்பாதிக்க கூடிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் கடனுக்காக காத்திருக்காமல் செய்ய வேண்டிய மேலதிக வேலைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்தின் கைகளை மாத்திரம் எதிர்பார்க்காமல் உடனடியாக இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டி விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால் நெருக்கடி மேலும் தீவிரமடையும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் இலங்கை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறது.

இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வதற்கு அனைத்து தரப்பினரும் இலங்கைக்காக திறமையாகவும் விரைவாகவும் செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.