அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்ததையடுத்து, இது கனடா வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

மணிக்கு 179 கி.மீ. வேகத்தில் கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கிய பியோனா புயல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட், பிரின்ஸ் எட்வர்ட் மற்றும் மாக்டலன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ளது.

புயல், மழையை தொடர்ந்து பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

மேலும் தகவல் தொடர்பு, வீதி போக்குவரத்து உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது.

அட்லாண்டிக் மாகாணங்களான நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு, நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் நியூ பிரன்சுவிக் மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கைகள் விடப்பட்டன.

நாட்டின் கிழக்குப் பகுதியில் 25 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். இது திடீர் வெள்ள அபாயத்தை அதிகரிக்கும்.விழுந்த மரங்கள் மற்றும் பிற குப்பைகளை அகற்றுவதற்கும், போக்குவரத்து இணைப்புகளை மீட்டெடுப்பதற்கும், தேவையானதைச் செய்வதற்கும் துருப்புக்கள் உதவும் என்று பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். எத்தனை துருப்புக்கள் அனுப்பப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

கரீபியனில் குறைந்தது ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் கனடாவில் எந்த உயிரிழப்புகளும் அல்லது கடுமையான காயங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நியூஃபவுண்ட்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள சேனல்-போர்ட் ஆக்ஸ் பாஸ்க் நகரில் ஒரு பெண் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட இராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும் புயல் பாதிப்பு காரணமாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜப்பான் செல்ல இருந்த பயணத்தை அவர் இரத்து செய்துள்ளார்.