சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை தொடர்ந்து துறைமுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் பயன்படுத்தப்படும் 2,000 பேருடன், இந்த போர்க்கப்பல் முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வரவிருந்தது.

எனினும் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி வோஷிங்டன் மற்றும் புதுடெல்லி எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடர்ந்து கப்பலின் திகதி இலங்கை அரசாங்கத்தினால் தாமதப்படுத்தப்பட்டது.

இலங்கை வெளியுறவு அமைச்சு வழங்கிய அறிக்கை

இந்த நிலையில் நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்திற்கொண்டு இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடியாக தொடர்பு கொண்ட மூன்று நாடுகளின் தூதுவர்களுடன் கொழும்பில் இராஜதந்திர ஆலோசனைகளை நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது, யுவாங் வாங் 5, தற்போது ஹம்பாந்தோட்டைக்கு தென்கிழக்கே சுமார் 580 கடல் மைல் தொலைவில் உள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, இந்திய கடற்படையிலிருந்து டோனியர் 228 கடல் கண்காணிப்பு விமானத்தை இந்திய அரசாங்கம் நாளை முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது.

இலங்கை விமானப்படை விடுத்த அறிவிப்பு

அண்மைக் காலத்தில் இந்தியாவில் பயிற்சி பெற்ற 15 பேர் கொண்ட இலங்கை விமானப்படை குழுவினரால் இந்த விமானம் இயக்கப்படும்.

அத்துடன் பொறியியல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய இந்திய அரசின் தொழில்நுட்பக் குழு இலங்கை விமானப்படையுடன் இணைக்கப்படும் என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.