முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடுதிரும்புவதற்கு இது சரியான தருணமல்ல என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது நாடு திரும்பினால் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடையலாம் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது அவர் நாடு திரும்புவதற்கான தருணம் என நான் கருதவில்லை என வோல் ஸ் ரீட் ஜேர்னலிற்கான பேட்டியில் தெரிவித்துள்ள அவர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்பதற்கான தகவல் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்த முறைக்காக கடும் எதிர்ப்பை எதிர்கொண்ட ராஜபக்ச அவர் பதவி விலகவேண்டும் என விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை தொடர்ந்து ஜூலை 13 ம் திகதி நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதற்கு சில நாட்களின் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாவதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் ரணில்விக்கிரமசிங்க வெற்றிபெற்றார்.

நிர்வாகத்தை கையளிக்கும் விடயங்கள் மற்றும் ஏனைய விடயங்களிற்காக விக்கிரமசிங்க தொடர்ந்தும் ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கின்றார் என வோல் ஸ் ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை மீட்புப்பொதிக்காக சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

ஏப்பிரலில் இலங்கை 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்துவதை இடைநிறுத்தியது, 2025ம் ஆண்டிற்குள் 21 பில்லியன் டொலர்களை கடனாக இலங்கை செலுத்தவேண்டும்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை ஆகஸ்டில் சாத்தியமாகும் என ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

உணவு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக 3 பில்லியன் டொலர்களை இலங்கை அடுத்த வருடம் ஏனைய தரப்புகளிடமிருந்து பெறவேண்டும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மாற்றமடைவதற்கு பல மாதங்களாகலாம் என விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.