முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர் பேராசிரியர் அதியா வாரிஸ் தனது சமீபத்திய அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் குழப்பத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழ்நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பாதகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் கடன் நெருக்கடியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடன் நெருக்கடியில் தவிக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கு இது சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகவும் ஐ.நா சுயாதீன நிபுணர் பேராசிரியர் அதியா வாரிஸ் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.