உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க தொடர்ந்து சேக்கிளார் சுவாமிகள் பாடியது பெரியபுராணம். பெருமை பெற்ற அடியார்களின் வரலாறுகளையும் பெருமைவாய்ந்த செய்திகளையும் உலகெலாம் பரப்புகின்ற இந் நூலினுள் மனித உரிமை மீறல்கள் பற்றிய தடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மனுநீதி முறைப்படி தீர்ப்பு வழங்குவதே சிறப்பெனப் பேசப்படுகிறது. பசுக் கன்றுக்காக தன்மகனை கொன்றவன் மனுநீதிச் சோழன்.இத் தீர்ப்பில் மனித உரிமை மதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
சோழ அரசர்களின் தலைநகராகிய திருவாரூர் நிலமகளின் பிறை நுதலில் இட்ட அழகிய பொட்டுப் போல் பொலிந்தது. அங்கே புற்றினுள் மறைந்திருந்த வீதிவிடங்கப் பெருமான் கோவில் கொண்டெழுந்தருளி இருந்தார். சோழப் பேரரசனின் தனிப்பெரும் புதல்வனின் பெயரும் வீதிவிடங்கன் என்பதாகும். அறிவு, ஆற்றல், ஆண்மை, அடக்கம், ஒழுக்கம் ஆகிய நற்பண்புகள் நிறைந்த கட்டிளங் காளையான வீதிவிடங்கன் இளவரசுப் பட்டம் பெற்றான். அவன் அரச வீதியில் தேரேறிச் சென்றபோது பசுக்கன்று தேர்ச் சில்லினுள் அகப்பட்டு இறந்து விட்டது. வீதிவிடங்கன் மிகத் துயருற்று அதற்குப் பிராயச்சித்தம் செய்ய முற்படுகிறான். தாய்ப் பசு அரண்மனை வாசலில் கட்டியிருந்த ஆராய்ச்சி மணியை தன் கொம்பினால் அடித்தது. மனுநீதிச் சோழன் அதிர்ச்சியுற்றான். சேவகர் பசுக் கன்று இறந்ததைக் கூறினர். அனுபவத்திலும் அறிவிலும் முதிர்ந்த அமைச்சன் வீதி விடங்கன் மீது குற்றமில்லை எனக் கூறினான். மனுநீதிச் சோழன் முறையான விசாரணை நடத்தாது எதேச்சதிகாரமாக தன் மகனைக் கொல்லும்படி மந்திரிக்கு கட்டளையிட்டான். தப்பான தண்டனையை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளாத மந்திரி உயிர் நீத்தார். மன்னன் தன் மகனை தேர்ச் சில்லால் நசித்துக் கொன்றான்.இது புராணக் கதை.
இங்கே கூறப்பட்டுள்ள சம்பவங்களில் மனித உரிமை மீறப்பட்டுள்ள விதத்தினை நோக்குவோம். சேக்கிழார் அமைச்சராகவிருந்த அடியவர். அதனால் இச் சம்பவம் பற்றிய சூழல் பற்றிய விபரங்களை முன்னாலே விபரிக்கிறார். வீதிவிடங்கன் மணிகள் கட்டப்பட்ட நெடிது உயர்ந்த தேரின் மீது ஏறி அரசுலாந் தெருவில் போந்தான். அவ் வேளையில் ங்கல வாழ்த்துப் பாடுவோர், வாழ்த்துவோர், வணங்குவோர், வரவேற்போர்என்று பலபேர் வீதியில் நிற்கின்றார்கள். வாத்திய ஒலியும் வாழ்த்தொலியும் நிறைந்த வீதியிலே மனித்தர் தன் வரவு காணாத வகையில் புனிற்றிளங் கன்று துள்ளி வந்து தேர்க் காலிடைப் புகுந்து இறந்தது என்று பாடியுள்ளார். மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டின் பேரில் மனுநீதிச் சோழனை கூண்டில் நிறுத்தி விசாரணை செய்து பார்ப்போம்.
வீதிவிடங்கன் அரச வீதியில் தேரூந்தான். அத் தேரில் மணி கட்டப்பட்டிருந்தது. தேரை வீதிவிடங்கன் ஓட்டியிருக்க முடியாது. அனுமதி பெற்ற தேர்ப்பாகனே தேரை செலுத்தியிருப்பான். வரவேற்பு ஊர்வலம் ஒன்றின் போது பேரிரைச்சலும் அமளி துமளியும் ஏற்படுவது இயல்பு.இளங் கன்று இயல்பாகவே பயமறியாது. வாழிப் பாய்ந்தோடுவது வழக்கம். இளங்கன்று தேர்க்காலிடைப் புகுந்து இறந்தமை விபத்து. தனது கன்று இறந்தமைக்காக மணியடித்து மன்னனிடம் நீதி முயன்ற தாய்ப் பசுவை விலங்கு என்று எண்ணுதல் முடியாது. தன் குழந்தையை பாதுகாப்பாக வைத்திராதது பசுவின் குற்றம். அல்லது பசு சொந்தக்காரனின் குற்றம். தவறான முறையில் வாகனத்தை செலுத்தியிருந்தால் தண்டனை சாரதிக்கே உரியது. வாகனத்தில் விபத்திற்கு தண்டிக்கப்படுவது நியாயமில்லை. அமைச்சன் இறந்தமைக்கு அரசனே காரண கர்த்தா. அமைச்சனின் மனைவி, மக்கள், உற்றார் , சுற்றத்தவர், ஆராய்ச்சி மணியை அடித்து முறைப்பாடு செய்து நீதி கேட்டிருந்தால் மன்னன் என்ன செய்திருப்பான். வீதிவிடங்கனின் தாய் தன் மகனுக்கு அநீதி இளைக்கப்பட்டு விட்டதாக ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டால் மன்னர் என்ன மறுமொழி சொல்வார். ஐந்தறிவு படைத்த பசுவுக்கு காட்டிய பரிவினை ஆறறிவு படைத்த அமைச்சனுக்கும், அரசகுமாரனுக்கும் ஏன் காட்டவில்லை. பசு முறைப்பாடு செய்தால் நீதிபதியாகிய அரசன் எதிரியாகிய வீதிவிடங்கனை விசாரித்திருக்க வேண்டும்.சாட்சியங்களையும் சம்பவங்களையும் அலசிப் பார்த்திருக்க வேண்டும். தன்னுடைய இரத்த உறவுடையவர் எதிரியாக வந்த போது தீர்ப்பு வழங்கும் பொறுப்பை வேறு நீதிபதியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மனித உரிமையின்படி தன் மகனுக்குரிய பாதுகாப்பை வழங்க முன்வந்திருக்க வேண்டும். அத்தோடு வீதிவிடங்கன் தவறு செய்திருந்தாலும் தந்தையென்ற முறையிலும் குடிமக்களின் அரசன் என்ற வகையிலும் அரசனே குற்றவாளி. தண்டனை அவருக்கே உரியது. இவ்வாறெல்லாம் குறுக்கு விசாரணை செய்யும் போது மனுநீதிச் சோழன் குற்றவாளி என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார். இந்த நிலையிலேதான் திருப்புமுனை ஒன்று ஏற்படுகிறது.
வீதிவிடங்கப் பெருமான் வீற்றிருக்கின்ற பெருமை மிக்க திருவாரூரில் மூன்று உயிர்கள் இடைநடுவில் பறிபோய் விட்டன. பரம்பரை பரம்பரையாக வீதிவிடங்கப் பெருமானை வழிபட்டு வருகின்ற சோழ வம்சம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் வகையாக மாட்டிக் கொண்டது. இதனை இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் மனுநீதிச் சோழ வம்சம் மனித உரிமை மீறியதாக வரலாற்றில் நிரூபிக்கப்படும். இதை பெருமை மிக்க செயலாக உலகெலாம் சொல்ல முடியாது. எனவேதான் சிவபெருமான் இடபரூபராக உமையுடன் வருகிறார்.இறந்துபோன பசுக்கன்றையும் அமைச்சனையும் அரசகுமாரனையும் உயிர்ப்பிக்கின்றார். இதனால் முன்பு நிகழ்ந்த இறப்புக்கள் இல்லாதொழிகின்றன. மனுவின் மனித உரிமை மீறல்களும் மறைகின்றன. மனித உரிமை மீறல்கள் நடைபெறும்போது அரச நீதீயை விட தெய்வ நீதியே ஏற்புடையது என்பதை சேக்கிழார் சுவாமிகள் உலகிற்கு உணர்த்துகின்றார்.இவ்விடத்தில் சேக்கிழார் பெருமான் பெருமையாகப் பேசியது மனுநீதியா? சிவநீதியா? என்ற வினா எழுகின்றது. இவ்வாறே சிறுத்தொண்டர் பிள்ளைக்கறி சமைத்த வேளையிலும் சிவபெருமான் மனித உரிமை மீறலை தவிர்ப்பதற்காகவே அப் பிள்ளையை உயிர்ப்பித்திருக்கிறார். எது நீதி என்பதை பொன்னை உரை கல்லில் உரசிப் பார்த்து தீர்மானிப்பது போல் அனுமானிப்பதே சிறந்தது. இவ்வாறான உண்மைகளும் தத்துவங்களும் பொதிந்துள்ள பொக்கிசமே பெரியபுராணம்.
செல்லையா பேரின்பராசா
துறைநீலாவணை .

