பெண்கள் மற்றும் சிறுவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்கள் ஊடாக வாங்கி விற்பனை செய்வதாகக் கூறப்படும் இணைய வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கவனத்திற்கு வந்த இந்த விவகாரம் தொடர்பில், சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் மற்றும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக தடுப்புப் பொலிஸ் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
போலியான சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி தமக்குத் தெரிந்தவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், சில சந்தர்ப்பங்களில் சொந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைக் கூட பகிர அல்லது விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இணையக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் இணையத்தில் தொடர்புகொள்ளும் நபர்கள் தொடர்பில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான இணையத் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1938 மற்றும் 1929 ஆகிய இலவச தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உளவியல் ஆலோசனை, சட்ட உதவி உள்ளிட்ட ஆதரவு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

