(அஸ்லம் எஸ்.மௌலானா)
மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த சில காலமாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட அதிநவீன மல்டி மெகா மின்னொளித் தொகுதிகளை புனரமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்புப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு, நேற்று முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான வசதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோரின் முயற்சியின் பயனாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 14.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிதியின் மூலம் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் இரவு நேர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் நவீன மின்னொளி வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் இரவு நேர விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நவீன மின்னொளி வசதிகளுடன் கூடிய ஒரேயொரு மைதானமாக மசூர் மௌலானா விளையாட்டு மைதானம் திகழ்கிறது.
Aslam S.Moulana
Journalist





