வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
(12.08.2026- புதன்கிழமை)
இவ் வருடத்திற்கான ஆடி அமாவாசை தீர்த்தம் இன்று 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கிழக்கில் முக்கியமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கோயில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகிதம் ஆடி அமாவாசை தீர்த்தம் சிறப்பாக நடைபெறுவது வழமை.
அன்று தந்தையரை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் உன்னதமான நாளாகும்.
இதேவேளை, இன்று(12) சூரிய கிரகணம் இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் கிரகணம் தோற்றாது என்ற காரணத்தினால் இன்று ஆடி அமாவாசை பிதிர்க்கடன் செலுத்துதல் மற்றும் தீர்த்தோற்சவத்தை செய்யலாம் என்று சமய வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் மட்டுமே வம்சம் விருத்தியாகும் அல்லது வாழ்க்கையில் தொழில் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு சடங்குகளைச் செய்யாதீர்கள்.
அப்படி எதிர்பார்ப்புடன் செய்வது மீண்டும் தீய கரும வினையையே நமக்கு உருவாக்கும்.
உண்மையான தர்ப்பணம் என்றால் என்ன?
இறந்தவர்களை நினைத்து, உயிருடன் இருக்கும் இல்லாத மற்றும் இயலாத எளிய மனிதர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தான தர்மங்களே உண்மையான திதி மற்றும் தர்ப்பணம் ஆகும்.
இப்படி நாம் செய்யும் உதவி, இருள் சூழ்ந்த நிலையில் இருக்கும் நம் முன்னோர்களை நற்கதி அடையச் செய்து வெளிச்சத்தை நோக்கி (புண்ணிய லோகத்திற்கு) அழைத்துச் செல்லும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பித்ருலோகம் என்பது ,
சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது.
பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவற்றை போக்க…
கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இதனால்…
மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள்.
அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்..!!
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம்.
ஏன் ஆடி அமாவாசை அன்று கொடுக்கிறோம்?
ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் என்பவர் தந்தை, சந்திரன் என்பவர் தாய். இவர்கள் இருவரும் ஒரு ராசி கட்டத்தில் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை.
ஆடி மாதம் என்பது தேவர்களுக்கு மாலை நேரமாக (தட்சிணாயன காலம் தொடக்கம்) கணக்கிடப்படுவதால், சூரியனும் சந்திரனும் இணையும் இந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திதி, தர்ப்பணம் செய்யவில்லை என்றால் வாழ்க்கை கெட்டுப்போய்விடும், பித்ரு தோஷம் வரும் என்றெல்லாம் சொல்வதை நம்பி பயப்பட வேண்டாம். உலக மக்கள் தொகையில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே இதைச் செய்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதில்லையா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இவை அனைத்துமே உணர்வு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு மத சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிட்டால், தாராளமாக ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவியை உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். பிற உயிர்களுக்குச் செய்யும் அந்த தன்னலமற்ற உதவியே உங்கள் வாழ்க்கையை மென்மேலும் சிறப்பாக்கும்!
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
