நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், இந்தப் பதவி உயர்வு 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்திகதியிட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஷானி அபேசேகர சில வருடங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தீர்ப்பாயம், அவரது பதவி உயர்வை மறுபரிசீலனை செய்து உரிய தரத்திற்கு உயர்த்துமாறு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி தரத்திற்கு உயர்த்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.
1986 பெப்ரவரி 10ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த ஷானி அபேசேகர, தனது நீண்டகால சேவையில் பொலிஸ் பரிசோதகர், தலைமைப் பொலிஸ் பரிசோதகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அவர், பல முக்கிய வழக்குகளின் விசாரணைகளிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
