கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் தொடர்பான விவகாரத்திற்கு இனவாதச் சாயம் பூசாமல், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் அரசின் சுற்றுநிருபங்களுக்கு அமைவாக நியாயமான தீர்வொன்றை எட்ட இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதித் தலைவர், சட்டத்தரணி அ. நிதான்சன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் ஹிஜாப் தொடர்பான விவகாரம் குறித்து முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்த அவர், சட்ட ஏற்பாடுகளுக்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைவாக உரிய தீர்வை வழங்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த விவகாரத்தை வெறுமனே ஒரு மத அல்லது இனப் பிரச்சினையாகப் பார்க்காமல், வைத்தியசாலை நிர்வாகத்தின் நடைமுறைகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு ஆகிய இரு விடயங்களையும் கருத்திற்கொண்டு அணுக வேண்டும்.
ஹிஜாப் தொடர்பான பிரச்சினைக்கு அப்பால், குறித்த வைத்தியசாலையில் தமிழ் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது மத ரீதியான பாகுபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அல்ல என்றும், சிகிச்சை வழங்கும் போது குங்குமத் துகள்கள் காயங்கள் அல்லது மருந்துகளுடன் கலப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, ஹிஜாப் விவகாரத்தை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவது எந்த வகையிலும் ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்காது. சட்டத்திற்கும் அரசின் சுற்றுநிருபங்களுக்கும் அமைவாக, அனைவரினதும் மத உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் வகையில் தீர்வொன்றை எட்டுவதற்கு இரு சமூகங்களும் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் அணுக வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் அரசின் நடைமுறைகளுக்கு அமைவாக உரிய தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இத்தகைய விடயங்கள் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படாமல், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் வகையில் கையாளப்பட வேண்டும்” என சட்டத்தரணி அ. நிதான்சன் மேலும் தெரிவித்தார்.
