மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். ஹாரிஸ் (நவாஸ்) மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நோன்பு 25 ஐ முன்னிட்டு “சகருக்கு ஸகன்” சகர் செய்யும் விசேட நிகழ்வு நேற்று (15) அதிகாலை வேளை வெகு விமர்சையாக அவரது இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இலவசமாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு மருதமுனையில் மாத்திரமல்லாது பிராந்தியத்தில் ஒரு பிரபல்யமாக பேசும், முன்னுதாரண நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
ரமழான் மாதத்தின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று சாகர் உணவு சாப்பிடுவதாகும். இந்த உணவை சாப்பிட்டு மறுநாள் இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பை நோக்குகிறார்கள். இதன் அடிப்படையில் “ஸஹருக்கு சகன்” என்ற வேலை திட்டத்தின் கீழ் திறந்த அழைப்பின் பிரகாரம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த விசேட சகர் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள், உலமாக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
ஆண்கள் -பெண்கள் என வெவ்வேறாக நடைபெற்ற “ஸஹருக்கு சகன்” நிகழ்வின் போது குறித்த வீதிகள் மின்னொளி களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













