ஈரானின் போர் கப்பல்கள் தொடர்பான நிலைமையில் இறுதி முடிவை எடுக்க இலங்கைக்கு முழு அதிகாரமும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் IRIS Dena மற்றும் IRIS Bushehr என்ற போர் கப்பல்களைச் சுற்றியுள்ள சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு துறையின் பேச்சாளர், இந்த விவகாரத்தை கையாள்வதில் இலங்கையின் இறையாண்மையை அமெரிக்கா மதிப்பதாக கூறினார்.

கப்பல், அதில் இருந்த பணியாளர்கள் மற்றும் கடலில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் கடற்படையினரின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எடுப்பது இலங்கையின் உள்நாட்டு சட்டங்களும் சர்வதேச சட்டப் பொறுப்புகளும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் நியூடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றியபோது, IRIS Dena கப்பலில் இருந்து கடலில் மீட்கப்பட்ட 32 கடற்படையினரை இலங்கை சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் பராமரித்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் IRIS Dena போர் கப்பல் மூழ்கியது.

இதையடுத்து இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு, உயிர் பிழைத்தவர்களை மீட்டதுடன் 84 பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரண்டாவது ஈரான் போர் கப்பலான IRIS Bushehr கப்பலுக்கும் இலங்கை பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கியதுடன், அதில் இருந்த 219 பணியாளர்களையும் வெளியேற்றியுள்ளது. இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட அந்த கப்பல் பின்னர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையில், ஈரான் கடற்படையினரை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

அதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு துறை பேச்சாளர், IRIS Bushehr கப்பல் பணியாளர்களும் மீட்கப்பட்ட ஈரான் கடற்படையினரும் தொடர்பான இறுதி தீர்மானம் இலங்கையின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.