இன்று ஆசிரியர் தினத்தில் மறைந்த நல்லாசிரியர் மாறன் யூ ஸெயின்

( வி.ரி. சகாதேவராஜா)

 சர்வதேச ஆசிரியர் தினத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும் எழுத்தாளருமான கலைவேள் மாறன் யூ ஸெயின் என அழைக்கப்படும் உதுமாலெப்பை ஸெயின் இன்று (6) திங்கட்கிழமை காலை காலமானார்.

சம்மாந்துறை கலாபிவிருத்தி கழகம் உருவாக்கிய  இலக்கிய ஆளுமைகளில் ஒன்றான மாறன் யூ ஸெயின் தனது 86 வது வயதில் காலமானார்.

ஆசிரியராக அதிபராக பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி இலக்கிய உலகத்திலும் கலாபிவிருத்தி கழகம் தேசியகலைஇலக்கியதேனகம் சம்மாந்துறை  தமிழ்எழுத்தாளர்சங்கம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகளூடாக தமிழ் இலக்கியத்திற்கும் சம்மாந்துறையின் இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியவர் .

புரட்சிமாறன் என்பது அவரைப் பொறுத்தளவில் பெயரில் மட்டுமல்ல குணத்திலும் அச்சுட்டாக அவரிடம் ஒட்டி இருந்தது. 

கவிதை நாடகம் இலக்கிய விமர்சனம் என்பதில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு இலக்கியவாதியாகவும் மனித தர்மங்களை பேணுகிற மானுடம் விழுமிய மனிதராகவும் கொள்கையளவில் இல்லாமல் செயற்பாட்டளவில்  வாழ்ந்த ஒருவர். 

அவருடைய விருந்தோம்பல் இன்னும் ஒருவருக்கு சாத்தியமாகுமா என்று யோசிக்கும் அளவுக்கு அவர் வாழும் காலத்தில் இருந்தது..

அனாயாசமான அவருடைய நடையும் எப்பொழுதும் அவருடன் கூட இருக்கும் ஜின்னா தொப்பியும் கக்கத்தில் இருக்கும் பத்திரிகைக் கட்டும் நிமிர்ந்து குனிந்து தான் உண்டு தன் பாடுண்டு எனும் நடையும்   அவரை நினைவு கூர்வன. 

அவரது முற்போக்கு கொள்கைகளோடு இந்த சமரசத்தையும் செய்து கொள்ளாத ஒரு இறுக்கமான கொள்கையோடு வாழ்ந்த ஒருவர்.

அன்னாரின் புதல்வர் சம்மாந்துறை வலய ஆசிரிய ஆலோசகர் கவிஞர் இசட் .எம்.றிஸ்வி மரணச் செய்தியை வெளியிட்டார்.

இன்று மாலை  5 மணியளவில் சம்மாந்துறை சலாம் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்