சர்வதேச சிறுவர் தினத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு
( வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச சிறுவர் தின வாரத்தின் ஓரங்கமாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகளுக்கான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல், துண்டுப்பிரசுரம் வழங்கல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டும் நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் களுவாஞ்சிகுடி பிரதான பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை போன்ற இடங்களில் இடம்பெற்றது.
“உலகை வழிநடாத்த – அன்புடன் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2025.09.25 தொடக்கம் ஒக்டோபர் 01ம் திகதி வரை சர்வதேச சிறுவர் தின வாரமாக பிரகடனப்படுத்தி பல நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
சிறுவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையினை ஏற்படுத்தல் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் சிறந்த போக்குவரத்து சேவையினை வழங்கும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு இடம்பெற்ற இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அஜந்தா தவசீலன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை நிலைய பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





