( வி.ரி.சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்)

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4  மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரியவருகிறது.

நேற்று  (14) இரவு 11 மணியளவில் அம்பாறை மாவட்டம்  ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் போது காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட ஆம்புலன்ஸ்  சாரதி ஒருவரும்  ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைகளில்   சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவித்தாலும் இன்னும் ஊர்ஜிதம் படுத்தப்படவில்லை.

மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்  சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.

பெரும்பாலும் பெரும்பான்மையின மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக இத்  தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.