அமரர் எம். பாலசுப்பிரமணியம் நினைவாக நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியும் , பரிசளிப்பு நிகழ்வும் தலைநகர் கொழும்பில் கடந்த 12/ 13 ஆகிய இரு தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.
சமூக இயல் பதிப்பகம் மற்றும் இலண்டன் மொழி புக்ஸ் பப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை சைவமங்கையர் மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அறிவிப்பாளர் அப்துல் ஹமிட், கதை சொல்லி பாபா செல்லத்துரை, பேராசிரியர் மௌனகுரு, லெனின் பாரதி , போஸ் வெங்கட் , வீரகேசரி , தினகரன், தமிழன் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியர்கள், அமரர் எம். பாலசுப்பிரமணியம் அவர்களது குடும்பத்தினர்கள் என ஈழத்து, தமிழக இலக்கிய ஆளுமைகள் பலரும் கலந்து சிறபபித்தனர்.

இச் சிறுகதைப் போட்டியில் இலங்கைப் படைப்பாளிகள் 131 பேர் கலந்து கொண்டனர். இதில் கல்முனை பிரதேசம் பெரியநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த இளம் இலக்கியவாதி சிறந்த பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரரான நீலாவணை இந்திரா எனும் புனைப்பெயரையுடைய பாக்கியராசா மிதுர்ஷன் எழுதிய சிறுகதை முதலிடம் பெற்றிருந்தது. அவருக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் நல் வாழ்த்துக்கள்.
நீலாவணை இந்திரா.
கல்முனை பெரியநீலாவணையைச் சேர்ந்த பாக்கியராசா மிதுர்ஷன் எனும் இயற்பெயரையுடைய நீலாவணை இந்திரா , கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் பிரிவில் அணுத்தொழில்நுட்பத்தில் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது அதே பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழிநுட்பம் பாடப்பரப்பில் தனது முதுமாணிப் பட்டத்திற்கான கற்கைநெறியினை மேற்கொள்கிறார்.
இவரது கக்கூஸ் வாளி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு தடைப்பட்டு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட இவரது இரண்டு கவிதைகள் கிழக்கின் கவிக்கோர்வையிலும், றெதிநெந்தா என்று பேசப்பட்ட சிறுகதை யொன்று கிழக்கின் நூறு சிறுகதைகள் தொகுப்பிலும் வந்துள்ளது.
கிழக்குப் பண்பாட்டலுவல்கள் நூலின் அடிப்படையில் இவரே மிகவும் இளம்வயதுடைய கிழக்கு மாகாண சிறுகதை எழுத்தாளர் ஆவார். மேலும் விவாதங்களிலும், மேடைப்பேச்சுக்களிலும் செயற்பட்டு வருகிறார்.







