துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் 126வது ஆண்டு விழா!
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்புற எல்லையான துறை நீலாவணக்கிராமத்தில் இங்கிலாந்து மெதடிஸ்த மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட மெதடிஸ்த மிசன் பாடசாலையும் அதன் அருகில் அமைந்த மெதடிஸ்த ஆலயமும் பல ஆண்டுகளாக ஆன்மீகப்பணியையும், சமுதாயப்பணியையும், கல்விப்பணியையும் இப்பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.
இத்திருச்சபையின் 126வது ஆண்டு விழாவின் முதல்நாளில் நற்செய்திக் கூட்டமும் இறுதி நாளில் ஸ்தோத்திர ஆராதனை ,ஞானஸ்நான வழிபாடு திருவிருந்து வழிபாடு என்பவற்றுடன் வேதப் படிப்பும் இடம்பெற்றது.
துறைநீலாவணை ஊழியர் சகோ.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கல்முனை சேகர முகாமைக்குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை, அருட்செல்வி அ.சுலோஜினி, சகோதரி தி.அதிஸ்டவதி மற்றும் திருச்சபையின் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் தலைவரும் சிறைச்சாலை ஊழியத்திற்கு பொறுப்பானவருமான அருட்திரு எஸ்.டி.தயாசீலன் கலந்து சிறப்பித்தார்.
திரு கே.பாக்கியராஜாவால் தொகுக்கப்பட்ட திருச்சபையின் வரலாறு திருமதி சசிகலாவினால் வாசிக்கப்பட்டது.மாலை நேர நிகழ்வில் கல்முனை , பெரிய நீலாவணை, துறைநீலாவணை ஆகிய திருச்சபைகளின் பெண்கள்,வாலிபர், ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அருட்திரு எஸ்.டி.தயாசீலன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.இதில் மூத்த உறுப்பினர்களான திருமதி நாகேந்திரன் திரு கே.பாக்கியராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.உக்கிராணக்காரர்களான திரு கலைவேந்தன். திருமதி கமலேஸ்வரி ஆகியோரின் வழிநடத்தலில் ஆண்டுவிழா சிறப்புற நடைபெற்றது.





