கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பனம் விதை நடும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும் பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வுகளானது  இன்றைய தினம்(24) புதன்கிழமை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில்  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் வழிகாட்டுதலில் கடற்கரையை  அண்டிய  பிரதேசங்களில்  இடம்பெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் குருக்கள்மடம் தொடக்கம் பெரியகல்லாறு வரையான      கரையோர பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்த பிரதேசங்களில் ஏற்படும் மண்ணரிப்பை தடுக்கும் முகமாக பனம் விதைகளும் நடுகை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்  சத்யகெளரி தரணிதரன், களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், சுற்றாடல் உத்தியோகத்தர் (மத்திய சுற்றாடல் அதிகார சபை), கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர், பாதுகாப்பு படையினர், பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுகளை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆ. ஜெயரூபன் மற்றும் யோ. நிசந்தராசன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.