(வி.ரி.சகாதேவராஜா)

  அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த  திருக்குளிர்த்திச் சடங்கு       (11)  வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையிலுள்ள ஒரேயொரு மங்கை மாரியம்மன் ஆலயமான இவ் ஆலயத்தின் திருக்கதவு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை காலை திறத்தலுடன் ஆரம்பமாகியது.

இவ் ஒருநாள் திருச்சடங்கின்போது விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து,  மங்கைமாரி அம்பாள் கிராம ஊர்வலமாகச் சென்று திரும்பியதும் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் பானை வைத்து பொங்கினார்கள்.

அதிகாலையில் அவை ஆலயத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து திருக்குளிர்த்தி  இடம்பெற்றது.

 பக்தர்கள் புடைசூழ , ஆனிப்பூரணையில் சித்தயோகத்துடன் கூடிய  சுப முகிர்த்த வேளையில்  திருக்குளிர்த்தி சடங்கு செயலாளர் சுதாகரனின் நெறிப்படுத்தலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 ஆலய சடங்குகள் யாவும் ஆலய பிரதம குரு, கோபால் தலைமையில் நிகழ்த்தப்பட்டன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து அங்கு இரவு பூராக வந்து கொண்டிருந்தார்கள்.