குஜராத் மாநிலம் ஆஹமதா பாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 271 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏ.ஏ.ஐ.பி.) சிறப்புக் குழு விசாரணை நடத்தியது. இதில் இந்திய விமானப்படையின் மூத்த விமானிகள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐ.நா. சபையின் சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் வல்லுநர்கள் இடம் பெற்றனர்.
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், உயிர்பிழைத்த பயணியின் சாட்சி அடிப்படையில் சிறப்பு குழு முதல் கட்ட விசாரணை நடத்தி விமான போக்குவரத்து துறையிடம் சில நாட்களுக்கு முன்பு அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து தற்போது அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:-
பொதுவாக விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டால் என்ஜின்கள் அணைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படுவது வழக்கம். இதற்காக விமானத்தின் பெட்ரோல் சுவிட்சுகளை விமானிகள் அணைத்து, மீண்டும் இயக்குவார்கள்.
அமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பெட்ரோல் சுவிட்சுகள் அணைக்கப்பட்டு, இரு என்ஜின்களும் செயல் இழந்துள்ளன. விமானம் புறப்பட்ட அடுத்த வினாடியே 2 என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்லவில்லை.
எரிபொருள் இல்லாமல் 2 என்ஜின்களும் வறண்டு செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. இதுவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பறவை மோதியதால் விமான விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சில தகவல்கள் கூறப்பட்டன. ஆனால் அமதாபாத்விமானம் புறப்பட்ட போது எந்த பறவையும் வந்து மோத வில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் கறுப்பு பெட்டியில் விமானியின் கடைசி உரையாடல் தெள்ள தெளிவாக பதிவாகி இருக்கிறது. அதில் விமானத்தின் 2 என்ஜின்களும் எரிபொருள் இல்லாமல் முடங்கியதை விமானி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
விமானத்தின் 2 என்ஜின்களும் செயல் இழந்த நிலையில், RAT (Ram Air Turbine) என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது. அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு என்ஜின் மட்டுமே ஓட தொடங்கியுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
மாலை மலர்