கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையிலும் மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறி அவர்களுடைய ஏற்பாட்டிலும் 2024.02.22 ஆம் திகதியன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தலைமையுரையில்,

அனைவரையும் வரவேற்றதோடு எமது வைத்தியசாலை வரலாற்றில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது நடாத்தப்படுவது இதுவே முதல்தடவையாகும். இந்த செயலமர்வின் நோக்கம் எமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த குணம், நலம் மற்றும் பலமிக்க ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் எனவும் அவர்களுடைய பங்கானது எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என கர்ப்பிணித்தாய்மார்களுக்கு கூறியதோடு மட்டுமல்லாமல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான பி.ஏ.டீ.எல்.ரன்சிறி அவர்களின் இந்த சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வில் பல்வேறுபட்ட விளக்கங்களும் அறிவுரைகளும் வழங்கப்படுவதை பார்த்து, செவிமடுத்து கர்ப்பிணித்தாய்மாராகிய நீங்களும் பலனடையுமாறும் உங்களுடைய பிரச்சினைகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் அளிக்கப்படும் எனக்கூறியதோடு இந்நிகழ்வினை நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அதிதியாக கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரி என்.ரமேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
தொடர்ந்து மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறி அவர்களினால் விளக்கவுரை செயலமர்வு ஆரம்பமானது.

“பொறுப்புள்ள பெற்றோர்” என்ற தலைப்பில் இந்நிகழ்வானது பின்வரும் விடயங்களை மையமாகக்கொண்டு கலந்துரையாடப்பட்டன. பல சிரமத்திற்கும் தியாகத்திற்கும் மத்தியிலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்த்தெடுப்பதன் பிரதான நோக்கம் என்ன? சமூகத்திற்கு நல்ல பிள்ளையை அளிக்க வேண்டும் ஆகவே அவ்வாறான பிள்ளையின் இயல்புகள், ஆரோக்கியம், புத்திக்கூர்மை, நற்பண்பு இவற்றையெல்லாம் பிள்ளைக்கு கற்று கொடுக்க மிகவும் உகந்த காலப்பகுதியே இந்த மகப்பேற்று காலம். வயிற்றில் உள்ள பிள்ளையுடன் பெற்றோர் உரையாடுதல், சிறந்த நல்ல புத்தக வாசிப்பு, பொருத்தமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதன் மூலமும் பிள்ளைக்கு நற்பயிற்சியை அளிக்க முடியும்.
வயிற்றில் இருக்கும் மகப்பேற்று காலத்தில் பிள்ளையானது உணரும், கேட்கும், பார்க்கும் மற்றும் உண்ணும் விதத்தை கற்றுக் கொள்ளும். அதற்காக, அம்மாவின் உடல் ஆரோக்கியம் பேண இயற்கை உணவுகளின் முக்கியத்துவமும், தகுந்த உடற் பயிற்சியும் மேலும் மகப்பேற்று நேரத்தில் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம். மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளான, வாந்தி, மலச்சிக்கல், வயிறு எரிவு, தசைப் பிடிப்பு, கால் வீக்கம், கால் நாளங்களில் ஏற்படும் வீக்கம் (Varicose Vein) போன்றவை பற்றியும், மருந்துவம் சார்ந்த நோய்கள் பற்றியும், சக்கரை வியாதி மற்றும் உயர் குருதி அமுக்கம் ஏனைய வியாதிகள் பற்றியும், கர்ப்பகாலத்தில் ஏற்படும் இவ்வகை நோய் நிலைமை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பாரதூரமான விடயங்கள் மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய அவசர மற்றும் ஆபத்தான அறிகுறிகளும் விரைந்து வைத்தியசாலை வரவேண்டிய நிலைமைகள் பற்றியும் கூறப்பட்டது.
கர்ப்பம் தரித்ததில் இருந்து பிள்ளை பிறக்கும் வரை உடலில் ஏற்படும் மாற்றங்களும் பிள்ளைப்பேறு நேரத்தில் வலியைத் தாங்குவதற்கான உபாயங்களும் கற்பிக்கப்பட்டது.
தாய்பாலூட்டலின் முக்கியத்துவம் மற்றும் பிள்ளைப்பேறின் பின்னரான கர்ப்பத்தடை உபாயாங்களும் விளக்கப்பட்டது.
மிக முக்கியமாக பிள்ளை பிறப்பின் பின்னர் ஏற்படும் மனநோய் பற்றியும் அதை தடுக்க கணவர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு பற்றியும் கர்ப்பகாலத்தில் செய்யக் கூடிய யோகா பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள் பற்றியும் விளக்கப்பட்டது. வருகைதந்த கர்ப்பிணி தாய்மார்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமும் அளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் மருத்துவ அதிகாரிகள், தாதிய பரிபாலகர், தாதிய பரிபாலகி, தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

You missed