பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் பேடன் பவல் தினம்.
துறைநீலாவணை நிருபர்.
உலகில் அமைதியைத் தோற்றுவிப்பதற்காகவும், மனிதாபிமானத்தை வேரூன்ற செய்வதற்காகவும், பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்ப்பதற்காகவும் இயற்கையை நேசிப்பதற்காகவும் என பல உயரிய நற்பண்புகளை வியாபிக்க செய்வதற்காகவும் பேடன் பவலினால் தொடங்கப்பட்ட உலகின் பேரியக்கமே சாரண அமைப்பாகும். இவ் அமைப்பின் ஸ்தாபகரான பேடன் பவல் தினம் இலங்கையில் உள்ள 37 சாரண மாவட்டங்களில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண சங்கத்தின் பேடன் பவல் தினம் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இடம்பெறுகின்றமை மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
இவ்வாறு அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட உதவி சாரண ஆணையாளர் வி.கமலதாஸன் (ஆசிரியர்) தலைமையில் இடம்பெற்ற 169 ஆவது பேடன் பவல் தின நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெப்பை அங்கு மேலும் பேசுகையில்.
புத்தக கல்வியுடன் இணைக் கலைத்திட்ட கல்வியும் பாடசாலைகளில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூகப் பொருத்தப்பாடு மிக்க சிறந்த ஆளுமைகளை உருவாக்க முடியும். இதனையே சாரண அமைப்பின் தந்தையான பேடன் பவல் பிரபு பட்டறிவுமூலம் உணர்ந்து சாரண அமைப்பை தோற்றுவித்து உலகம் பூராவும் வியாபிக்க வைத்தார்.
இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் பதினெட்டு (18 ) கோடி சாரணர்கள் உள்ளனர். இதற்கமைய இலங்கையில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் சாரணர்கள் உள்ளனர். இதில் எமது அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண சங்கத்தில் இரண்டாயிரத்து எழுநூற்று அறுபது சாரணர்கள் உள்ளனர் என்றார்.
இந் நிகழ்வில் ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளரும் சாரண பயிற்சிக் தலைவருமான யூ.எல்.எம் ஹாசீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் உதவி மாவட்ட சாரண ஆணையாளர்களான ஏ.ஜி.சுகைப் திருமதி சந்திரவதனி கமலதாஸன் தஸ்தக்கீர் மாவட்ட பதில் தலைவர் யூ.எல். கலிலூர் றகுமான் கணக்கெடுப்பு பொறுப்பாளர்.எஸ்.எல்.கடாபி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
