கல்முனை பிரதேசத்தில் நகர அபிவிருத்தி எனும்போர்வையில் தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கல்முனை 1 கிராமசேவகர் பிரிவில் உள்ள சில இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரஃப் உள்ளிட்ட குழுவொன்று நேற்று (15) பார்வையிட்டு சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ்வரும் கல்முனை 1 கிராமசேவகர் பிரிவில் உள்ள தனியார் காணிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான தாழ்நில நீரேந்து பிரதேசங்களை குறிவைத்து இந்த காணி அபகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மஹிந்த அரசு காலத்தில் தாம் வழங்கிய ஆதரவுகளுக்காக நகர அபிவிருத்தி திட்மொன்றிற்கான முன்மொழிவுகளை வர்த்தமானிப்படித்தயுள்ள முஸ்லிம் தரப்பு அரசியல்வாதிகள் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

அதன்முதற்கட்டமாக அரச திணைக்களுங்களுக்கான கட்டடத்தொகுதியென்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் முஷரஃப் மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் சிலருடன் சில பிரதேசங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.

முற்றுமுழுதாக தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள், வயல் நிலங்கள் மற்றும் அவற்றிற்கான நீரேந்து பகுதிகளில் பிரதானமாக முஸ்லிம்களின் குடியிருப்புகளை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டிருக்கின்றமையால் தொடர்ந்தும் இச்செயற்பாடுகளை தமிழர் தரப்பு நிராகரித்து வருகின்றது.

கல்முனை வடக்கு மற்றும் கல்முனை பிரதேச செயலகங்களுக்கு இடையில் சமூகங்களிடையே பிரதான முறுகலை தோற்றுவித்துவருவது காணி அதிகாரம் ஆகும். 1993 ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிதி மற்றும் காணி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணித்திருந்தும் முஸ்லிம்களின் அரசியல்வாதிகள் அதனை நடைமுறைப்படுத்துவதை இன்றுவரை தடுத்துவந்திருக்கின்றனர்.. இதன்காரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கேனும் சரி அல்லது அலுவலகம் சார்ந்த விடயங்களுக்கேனும் சரி ஒதுக்கப்படும் நிதிகள் சரியாக பங்கிடப்படாததுடன் தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச காணிகள் முஸ்லிம்களுக்கு காலத்திற்குக்காலம் சட்டமுறையற்ற விதத்தில் பங்கிடப்பட்டும் வந்துள்ளது.

இதன் காரணமாக 1989 ம் ஆண்டு வடக்கு பிரதேச செயலகத்திற்கான அனுமதிகள் நிருவாக நடைமுறைகளின்படி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டபோதிருந்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களுக்கும் தற்போதைய நிலைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை மேலும் சிக்கலாக்கும் வகையிலேயே இந்த நகரமயமாக்கல் நகர்வுகளும் முஸ்லிம் குடியேற்றங்களிக்கான முஸ்தீபுகளும் தொடர்கின்றன. இதேபோன்று தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்க ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் குடியேற்றத்திற்கு உதாரணமாக கல்முனை பிரதேச செயலகத்தின்கீழ் முறைப்படி அங்கீகாரம் பெறப்படாது இயங்கிவரும் “இஸ்லாமாபாத்” கிராம சேவகர் பிரிவை உதாரணமாக குறிப்பிடலாம்.

இந்தநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மீதான நிருவாக அத்துமீறல்கள் தொடர்வதை ஆட்சேபித்தும் தங்களுக்கு உரித்தான நிருவாக செயற்பாடுகளுக்கான அடிப்படைகளை வர்த்தமானிப்படுத்தவும் கோரி தமிழர் தரப்பால் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர்களது பிரதேசங்களில் காணி அபகரிப்பில் ஈடுபடமுனையும், கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை மாற்ற முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கையெடுக்க நீதிமன்றை கோர நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி -சுபீட்சம்