தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு!

தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு தொடர்பில் இதுவரை எந்தத்தீர்மானங்களும் எமக்கு கிடையாதென கல்முனை தொகுதி தமிழரசு கட்சி செயலாளர் அரவிந்தன் வேதநாயகம் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.
ஊடகமொன்றில் வெளியான செய்தி தொடர்பாக அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எமது கட்சியின் தொகுதிக்கிளை கூடியதாகவும் அப்போது சில வட்டாரப் பிரச்சினைகள், உறுப்பினர்கள் கட்சி மாறிச் செயற்படுகின்றமை, கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவத்தை அதிகரித்தல் மற்றும் பொது விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவையே எமது நிகழ்ச்சி நிரலாக இருந்ததெனவும் குறிப்பிட்டார்.

தமிழ் அரசு கட்சி தலைமை தெரிவு தொடர்பில் உங்களது தொகுதியின் நிலைப்பாடு என்னவென கேட்டபோது தலைவரை வாக்கெடுப்பு முறையில் தெரிவுசெய்ய நேரிட்டால் எமது தொகுதி உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் எனவும் தெரிவு செய்யப்படும் தலைமையுடன் தாம் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தும், ஏனைய தொகுதி, மாவட்ட கிளைகளை தர்மசங்கடத்துக்குள்ளாக்கும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.