காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை காரணமாக தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் எதிர்வரும் 31ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, பெப்ரவரி முதலாம் திகதி நாட்டின் கிழக்கு கடற்கரையை நெருங்கும் என வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.