கல்முனையில் ஒரு வார காலத்திற்கு இறைச்சி விற்பனைக்குத் தடை

(முதல்வர் ஊடகப் பிரிவு)

கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக ஆடு, மாடு அறுப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட அறிவித்தலை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் நேற்று வெளியிட்டிருந்தார்.

விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுவது தொடர்பாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 12/12/2022 ஆம் திகதிய கடிதத்திற்கமைவாகவும் ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரது அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களுக்கமைவாகவும், அதிகுளிர் காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெருந்தொகையான கால்நடைகள் உயிரிழந்து வருவதுடன் நோயுற்றுள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இவ்வாறான கால்நடைகள் சட்டவிரோதமாக இறைச்சிக்கடைகளில் விற்பனை செய்யப்படலாம் எனவும் அதன் காரணமாக மாவட்டத்திற்கு மாவட்டம், மாகாணத்திற்கு மாகாணம் இறைச்சி கொண்டு செல்லப்படுவது ஜனாதிபதி அவர்களினால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது மக்களின் சுகாதாரத்தையும் நலன்களையும் கவனத்தில் கொண்டு, 12/12/2022 ஆம் திகதி தொடக்கம் 18/12/2022ஆம் திகதி வரை எமது மாநகர சபை எல்லையினுள் இயங்குகின்ற விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பதுடன் இறைச்சி விற்பனையும் முற்றாக தடை செய்யப்படுவதாக மாநகர முதலவர் அறிவித்துள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர முதல்வரினால் பணிப்புரை விடுக்கபட்டுள்ளது.

இதன் பிரகாரம் இக்காலப்பகுதியினுள் ஆடு, மாடு அறுப்பதும் இறைச்சி விற்பனை செய்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறுவோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர எல்லையினுள் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முதல்வரினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத இறைச்சி வியாபாரம் தொடர்பில் பொது மக்கள் விழிப்பாக இருப்பதுடன் அவ்வாறு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.