கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது
பாறுக் ஷிஹான்-
வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா தலைமையிலான பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 32 லீட்டர் பெற்றோல் எரிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும் குறித்த வழக்கு நாளை திங்கட்கிழமை(9) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைககமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.






