பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் அமர்வு நேற்று (25/10/2022) செவ்வாய்கிழமை மு.ப 10மணிக்கு தவிசாளர் கௌரவ சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஈழ வள நாட்டில் கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திருகோணமையில் அமைந்துள்ள திருககோணேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது.

இந்நிலையில் அந்த ஆலயத்தில் தொல்பொருள் என்ற போர்வையில் கோயில் புனருத்தாரண கட்டுமானப்பணிகள் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன, அங்கு சிங்கள ஆக்கிரமிப்புக் கடைகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றன.

இவைகளையெல்லாம் இந்த அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக அனைத்தையும் மூடிமறைத்து, இந்து மதத்தையும் மக்களையும் வரலாற்றையும் மூடி மறைக்க அரசு முயல்கின்றது. தமிழர்களை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடு கிழக்கில் மாத்திரமின்றி வடக்கிலும் நடந்தேறி வருகின்றன. எனவே கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் இச்சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றுகின்றோம். இந்த தீர்மானத்தை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

சபை உறுப்பினர்கள் அனைவரும் தாம் ஏகமனதாக இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.

மேற்படி தீர்மானத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கும் பிரதமர் கவனத்திற்கும் அனுப்ப வேண்டும் எனவும் சபையில் முடிவு எடுக்கப்பட்டது.