ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வுகளுக்கு முன்னதாக, இலங்கை வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிகள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர்.

ஜெனிவா பிரதிநிதிகள் குழு தலைவர் ரோரி முன்கோவன் மற்றும் பிற உறுப்பினர்களை சந்தித்த சப்ரி விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் எழுச்சி போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய நடப்பு காரணமாக, தேசிய இறையாண்மை மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளின் காரணங்களுக்காக, பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தடைகள் இருப்பதாகவும் அமைச்சர் சப்ரி விளக்கியுள்ளார்.

இராணுவம் மற்றும் அரசியல் தலைமைகளுக்கு எதிரான சாட்சியங்களை சேகரிப்பதிலும் அதே தடைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

புதிய சட்டங்கள்

இந்நிலையில் கருத்துரைத்துள்ள ஜெனீவா பிரதிநிதி முங்கோவன், பயங்கரவாதத் தடைச் சட்டம், பயன்படுத்தப்படாது என்று இலங்கை அரசாங்கத்திடமிருந்து பலமுறை பகிரங்க அறிவிப்புகள் வந்துள்ளன.

சர்வதேச சமூகம் வெளிப்படுத்தும் கரிசனைகளை கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் தற்போது கைதுகளுக்காக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் மூலம் அண்மைய பிரச்சினைகளையும் உள்ளடக்கிய வகையில் 46-1 அடிப்படையிலான ஒரு தீர்மானம், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் என்று முங்கோவன் சுட்டிக்காட்டியதாக அறியப்படுகிறது.

புதிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

மிச்செய்ல் பெச்லெட்டுக்கு பதிலாக புதிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில் புதிய ஆணையாளரின் வரைவு, செப்டெம்பர் 10 திகதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

எனவே இலங்கையில் தற்போதைய நெருக்கடி நிலையை அரசாங்கம் காரணம் காட்டினாலும், மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வுக்கு முன்னர் அமெரிக்கா உட்பட்ட நாடுகளின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் தீரமானங்களை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.