நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் த. கலா அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேசத்துக்கான 2ஆவது சிறுவர் சபைக் கூட்டம் 29.08.2026 அன்று சனிக்கிழமை நடைபெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், யோகாசனப் பயிற்றுவிப்பாளரும் கலாபூஷணம், யோகரத்தினா காளிக்குட்டி சந்திரலிங்கம் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு, சிறுவர் கழகப் பிள்ளைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளை வழங்கினார்.
பெங்களூர் விவேகானந்தர் கேந்திரா யோக ஆராய்ச்சி நிலையத்தில் யோகப் பயிற்சி பெற்றுள்ள காளிக்குட்டி சந்திரலிங்கம் அவர்கள், சிறி சிதானந்த சரஸ்வதி யோகி அவர்களின் முதல் மாணவர் என்பதுடன், அவரிடம் குரு–சிஷ்ய பரம்பரையில் 10 ஆண்டுகள் யோகப் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் நீண்டகால யோகப் பயிற்சிப் பணியானது, பிரதேச சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாட்டுக்கு பெரிதும் பயனளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










