#ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (26) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.பி.நசீப் அலாம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கௌரவ அதிதியாகவும், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எஸ்.எம்.எம்.அறூஸ், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாப்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.ஏ.எம்.ரபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

ஏறாவூர் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக அதிதிகளால் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் இத்தகைய சமூக நலன்சார் முன்னெடுப்புகளுக்கு சமூகப் பிரமுகர்களும் பெற்றோர்களும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.