கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான ‘இலங்கை உரிமம் வழங்கும் சுற்று 2026’ (Sri Lanka Licensing Round 2026) ஆரம்ப நிகழ்வில், Frontier Energy Network நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கேய்ல் மைக்கல், முன்பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் தனது செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
மன்னார் படுகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 839 பில்லியன் கனஅடி (BCF) இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக P50 மதிப்பீட்டில் கணிக்கப்பட்டுள்ளது.
இதில் Barracuda பகுதியில் மட்டும் 525 BCF எரிவாயு வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் மேலதிக வளத்திற்கான சாத்தியம் தற்போதைய மதிப்பீட்டைக் காட்டிலும் குறைந்தது நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் படுகையில் இதுவரை ஆய்வு செய்யப்படாத கணிசமான பகுதிகள் உள்ளதாகவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஆழ்கடல் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது அதிகளவில் சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2032ஆம் ஆண்டுக்குள் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிப்பதே இலக்காக உள்ள நிலையில், அதற்கு முன்னர் நில அதிர்வு ஆய்வுகள் மற்றும் ஆய்வுத் துளையிடல் மூலம் வர்த்தக ரீதியாக பிரித்தெடுக்கக்கூடிய வளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

